இலங்கை குடிமகன் கைது குறித்து, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என விளக்கமளிக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர், தனது கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது குறித்து இலங்கை தூதரத்திற்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டுமென, சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் போது தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு அனுமதி கேட்பார்கள். அதேபோல, அந்நாட்டை சேர்ந்த நபருக்கு தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமென தெரிவித்தனர்.
கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
