திருப்புவனம் அருகே தனது ஒன்பதரை சவரன் நகையை திருடி விட்டதாக அஜித் குமார் என்ற நபர் மீது நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் அஜித்தை கைது செய்து அடித்து துன்புறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜித்குமாருக்கு நீதி வழங்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா ஏற்கனவே பண மோசடி புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்தது. நிகிதா தலைமறைவானதால் அவருடைய வீடு பூட்டிக்கிடக்கிறது. கோவையில் அவர் பதுங்கி இருப்பதாக சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நிகிதா அழுது கொண்டே பேசும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ”இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து சமூகத்தில் மிக உயரிய பொறுப்பிற்கு வருவது மிகப்பெரிய சவால்.
பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பின் என்ன நடந்தது என தெரியாது. என்னுடைய தந்தை முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 2011-ம் ஆண்டு பலதரப்பினரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் வந்துள்ளது. ஓய்வு பெற்ற பின்பு ஒரு அதிகாரிக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று.
அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான் ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்று விட்டு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன். எனது தாய் கீழே விழுந்து அடிபட்டு பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன்.
தற்போது எனக்கு சோதனையான காலம். என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு பெரிய அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் நன்கு தெரியும், அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
