இந்திய திரைத்துறையில் தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மோலிவுட் எல்லாவற்றையும் தாண்டி, பான் இந்தியா என்ற அளவு வளர்ந்து நிற்கிறது. அனைத்து மொழி படங்களையும், அந்ததந்த மொழிகளுக்கு ஏற்ப டப்பிங் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியாகும் படங்கள் பல வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் வரவேற்பை பெறுகின்றன.
அந்த வகையில், கன்னட மொழியில் உருவான காந்தாரா என்ற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கே.ஜி.எப் படத்தை தொடர்ந்து ஒரு கன்னட படம் இந்தியா முழுவதையும் புரட்டிப் போட்டது என்றால் அது காந்தாரா தான். ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே ஹீரோவாக நடித்தும் இருந்தார். ரூ.16 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.200கோடி வசூல் செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

நிறைய கண் திருஷ்டி பட்டதாலோ என்னவோ, காந்தார 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல், அடுத்தடுத்து விபத்துகளும், உயிரிழப்புகளும் வந்து கொண்டே இருந்தது. இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர், கேராளாவில் சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அவரைதொடர்ந்து நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி நண்பரின் திருமண நிகழ்வில் நடனமாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேப் போல படப்பிடிப்புக்காக வந்திருந்த திருச்சூரை சேர்ந்த விஜூ.வி.கே என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதேப் போல சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் 30 பேரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவற்றை எல்லாம் மீறி படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
