பாஜகவுடன் கூட்டணி வைக்க நாம் என்ன ஊழல் கட்சியா? என மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 1.5லட்சம் பேருக்கு இருக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதனையும் தாண்டி லட்சக்கணக்கில் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். இந்த நிகழ்ச்சியில் தனது முதல் தேர்தலை தவெக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது குறித்து விஜய் விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக கூட்டணி குறித்து விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கூட்டணி குறித்து பேசிய அவர், ”சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான்.
நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மகத்தான மக்கள் படை. பா.ஜ.க.வுடன் மறைமுக கூட்டணிக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு தரப்படும். 2026-ல் இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே, ஒன்று தி.மு.க. மற்றொன்று த.வெ.க. 1967, 1977-ல் நடந்தது போல் 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும்.
பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா? அல்லது இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. நமது தமிழ்நாட்டு மீனவர்கள் சுமார் 800 பேர் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அந்த தேர்வு தேவையில்லை என்று அறிவித்து விடுங்கள்” எனக் கூறினார்.