சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மை நாட்களாக சென்னையில் அரசியல் தலைவர்களின் இல்லம், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம், கடற்படை உணவகம், மத்திய அரசு நிறுவனங்கள், அதிமுக தலைமை அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மேலூர் மெயின் ரோட்டில் உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனே நீதிமன்றத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதேநேரம் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அலர்டான போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு முன்னதாக சென்னை சிபிஐ நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் என 5வது முறையாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பட்டு வருகிறது.