ஆசியக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கிய 17ஆவது ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பிடித்தன. இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.
ஆசியக்கோப்பை 2025 தொடரில் இரண்டு அணிகளும் மோதிக்கொள்வது இது மூன்றாவது முறையாகும். லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று இரண்டிலும், இந்திய அணியே வென்றிருந்தது. இதனால், பாகிஸ்தான் அணியினர் தக்கப் பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர் தொடக்கம் முதலே, அதிரடியாக ஆடினர். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினர்.
சாஹிப்சதா ஃபர்ஹான் மற்றும் ஃபஹர் ஜமான் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால், பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தனர். அபாரமாக ஆடிய சாஹிப்சதா ஃபர்ஹான் தனது 5ஆவது அரைசதத்தைக் கடந்தார். இருவரும் விளையாடிய விதத்தால் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 (58 பந்துகள்) ரன்கள் எடுத்தனர். பின்னர் பர்ஹான் 57 (38 பந்துகள்) ரன்கள் எடுத்த நிலையில், வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தார். சிறிதுநேரம் தாக்குப் பிடித்த சைம் அயூப் 14 ரன்களில் வெளியேற ஒட்டுமொத்த பாகிஸ்தான் இந்திய அணியின் பிடிக்குள் இறுகியது.
தொடர்ந்து முஹமது ஹாரிஸ் (0), ஃபஹர் ஜமான் (46), ஹுசைன் தலத் (1), சல்மான் அகா (8), ஷாகின் ஷா அஃப்ரடி (0), ஃபஹீம் அஷ்ரஃப் (0), ஹாரிஸ் ராஃப் (6), மொஹமது நவாஸ் (6) என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 33 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து. இந்திய அணி தரப்பி குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒரே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அபிஷேக் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (1), சுப்மன் கில் (12) என அடுத்தடுத்து வெளியேற 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதன் பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் அணியை வீழ்ச்சியில் இருந்து தடுத்தனர். பின்னர் சஞ்சு சாம்சன் 24 ரன்களில் வெளியேறினார். இதனால், இந்திய அணி எடுக்க வேண்டிய ரன்ரேட் அதிகரித்தது. 14 ஓவர்களில் இந்திய அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவர்களில் 64 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதற்கடுத்து இந்திய அணியினர் அதிரடியாக ஆடினர். ஹாரிஸ் ராஃப் வீசிய 15ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை பறக்க விட்டனர். ஷிவம் துபே, திலக் வர்மா இருவரும் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
19ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஷிவம் துபே 33 (22 பந்துகள்) ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
கடைசிவரை களத்தில் இருந்த 69 (53 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்திய அணி பெற்ற 9ஆவது ஆசியக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.