மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அதன் பேரில், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்ட மகேஷ் குமார் (தெலுங்கு தேசம் கட்சி) ஆகிய 8 பேர் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இது தொடர்பான அறிக்கையை நேற்று தேசிய தலைமையிடம் எம்பிக்கள் குழு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கரூர் சம்பவத்திற்கு முறையாக திட்டமிடாத மாவட்ட நிர்வாகமும் அரசும் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது.
மேலும், மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் யாரும் தங்களை சந்தித்து, நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.