கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும், தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27ம் தேதி கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகு தவெக கட்சியில் பல அதிரடி மாற்றங்களை விஜய் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பெரும் கூட்டம் கூடினால் மக்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர்கள் படையை உருவாக்க வேண்டும் என நினைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தொண்டர்கள் படை தவெகவின் கட்சி கூட்டம் எங்கெல்லாம் நடக்கிறதோ, பேரணி எங்கெல்லாம் நடக்கிறது அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. தவெக சார்பில் தொண்டர் படை அமைத்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கரூர் சம்பவத்திற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த், அதவ்ல் அர்ஜூனா போன்றவர்கள் தலைமறைவாக இருப்பதால் 2ம் கட்ட தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் விஜய் தள்ளப்பட்டுள்ளார். இதற்கான தலைவர்களை உருவாக்கும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி 2ம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டால் அவர்கள், தமிழகம் முழுவதும் சென்று தவெகவின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது, அரசியல் செயல்பாடுகளை எதிர்கொள்வது, தேர்தல் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.