தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு பல்வேறு கோணங்களில் தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவர் விஜய்யையும் விமர்சிக்க வைத்துள்ளது.
அதில் குறிப்பாக அவர் திமுகவை நோக்கி பேசிய, “நம்ம தலைவரு ELECTION DAY அன்னைக்கு கருப்பு சிவப்பு சைக்கிளோட வந்து உங்களுக்கு ஆதரவு கொடுக்குறேன்னு சொன்னாரே உங்களுக்கெல்லாம் வந்து நன்றியுணர்வு இல்ல?” என்ற வார்த்தைகள் “தவெக தலைவர் விஜய்யை இயக்குவது திமுக-வா?” என்ற பழைய மற்றும் தொடர் சந்தேகத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. அவர் பேசும்போது விஜய் கொடுத்த ரியாக்ஷனும் அக்கருத்திற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் வரவேற்கும் வகையிலேயே இருந்தது. அந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியது ஒரு ஒப்புதல் வாக்குமூலம்.
‘2021 தேர்தலில் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து வாக்களித்ததன் மூலம் தனது கோடான கோடி ரசிகர்களை திமுகவுக்கு வாக்களிக்குமாறு குறிப்பு பிரச்சாரம் செய்தார்’ என சொல்வது அன்றைய தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக வியூகம் வகுத்து உழைத்த ஆதவ் அர்ஜுனா. “2021 தேர்தலில், தான் ஆதரவு கொடுத்த திமுகவை 2024-ல் கட்சி தொடங்கி எதிர்க்கும் அளவிற்கு இடைப்பட்ட 2 வருடங்களில் என்ன நடந்துவிட்டது?” எனும் எதார்த்த கேள்வி தான் மனதிற்குள் குறுகுறுக்கிறது.
“விஜய் மிகக்கடுமையாக விமர்சிக்கும் திமுக, எதற்காக தனக்கு எதிராக செயல்படுமாறு விஜய்யை இயக்க வேண்டும்?” என கேட்டால், அதற்கான பதில் வாக்கு பிரிப்பு தான். 5 ஆண்டுகால ஆட்சியில் உருவான அதிருப்தி காரணமாக, திமுகவுக்கு எதிராக சிதறும் வாக்குகள் இயல்பாகவே அதிமுகவுக்கு தான் போகும். அவ்வாறு சிதறும் வாக்குகள் எதிர்க்கட்சியான அதிமுக எனும் ஒரு கட்சிக்கே பெரும்பான்மையாக போய் சேராமல் தடுப்பதே தமிழக வெற்றி கழகத்தை உருவாக்கியதன் நோக்கமாக இருக்கலாம். இங்கு இன்னொரு கேள்வி எழலாம், “அவர் பாஜகவையும் தானே எதிர்க்கிறார்?” என்று. எதிர்க்கிறார் தான். ஆனால், பாஜக மீதான எதிர்ப்பு திமுக மீதான எதிர்ப்பை காட்டிலும் ஆழம் குறைவு தான். காரணம் திமுகவுக்கு தேவையான முழுமுதல் வெற்றி சட்டமன்ற தேர்தலில் தான். ஏனென்றால் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை (ஒருவேளை இனியும் கூட) பாஜக எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் இயல்பாகவே இருப்பது தான். அதனால் விஜய்யின் தேவை சட்டமன்ற தேர்தலில் தான் தேவை.
சரி, கூடுதலாக இந்த எண்ணத்திற்கு வலு சேர்ப்பது, “தனது தலைமையிலான கூட்டணி” என்ற நிலைப்பாடு. திமுகவை தோற்கடிப்பதுதான் நோக்கம் என்றால், முதல் தேர்தல் என்ற அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவது தான் இயல்பான தேர்வாக இருந்திருக்கும். ஆனால், அதிமுகவே மறைமுகமாக வலிய வந்து கூட்டணிக்கு அழைத்தும் போகாமல் இருப்பது மேற்கூறிய சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. மேலும், “2026-ல் இரண்டே பேருக்கு தான் போட்டியே; ஒன்று TVK இன்னொன்று DMK” என அவர் மீண்டும் மீண்டும் அழுத்தி கூறுவது, அதிமுகவை மக்கள் மத்தியில் மழுங்கடிக்கும் செயல். அதிமுகவை எதிர்க்காமல் இருப்பது அக்கட்சியின் வாக்கு வங்கியை தன்பக்கம் திருப்புவதன் முயற்சி. “இதை அதிமுக எப்படி கையாளப்போகிறது?” என்பது அவர்களுக்கான கேள்வி.
“விஜய் திமுகவின் B-TEAM இல்லை” என்பது தான் உண்மையெனில் அது இனிவரும் காலத்தில் 2026 தேர்தலுக்கான அவருடைய கூட்டணி நிலைப்பாடு மூலம் தான் தெரிய வரும். அது அவர் கையில் தான் உள்ளது.
