கடந்த வார சனிக்கிழமை ( நவம்பர் 15 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவர இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியானது. எஸ் எஸ் ராஜமவுலி என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த முறை அவரது அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிடுவதிலேயே நமக்கு பிரம்மாண்டத்தை காண்பித்து விட்டார்.
130 அடி உயர எல் இ டி ஸ்கிரீன்களை செட் செய்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.மகேஷ் பாபு பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் இம்மூவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரித்திவிராஜ் சுகுமாரன் கும்பா என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாகவும் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
படத்தின் தலைப்பு “வாரணாசி”.சுமார் 3 நிமிடம் 41 நொடி நீளமுள்ள படத்தின் தலைப்பு வீடியோவை 130 அடி உயர எல்இடி ஸ்க்ரீன்களில் திரையிட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். வீடியோவில் ஆதிகாலம் தொட்டு நிகழ்காலம் வரை கதையின் சூழல் இருக்கப் போகிறது என்று நமக்கு காண்பித்துள்ளனர்.
விழாவில் ராஜமவுலி பேசுகையில், “எனக்கு மகாபாரதம் மற்றும் ராமாயணம் மிகவும் பிடிக்கும். இத்திரைப்படத்தில் ராமாயணத்தில் வரும் ஒரு சில காட்சி அமைப்புகளை படமாக்கி இதில் மகிழ்ச்சி கொண்டேன். மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் பார்த்தபொழுது எனக்கு புல்லரித்துவிட்டது. மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் வைத்து இயக்கிய நாட்கள் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் மகேஷ் பாபு, “இது வெறும் படத்தின் தலைப்பு வெளியிடும் விழா மட்டுமே. அப்படி என்றால் இனி என்னென்ன விஷயங்கள் எப்படி நடக்கப் போகிறது என்பதை உங்கள் வியூகத்திற்கு விட்டு விடுகிறேன். ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் வாரணாசி திரைப்படம் வெளியாகும் பொழுது இந்தியாவே பெருமைப்படும்” என்று கூறியுள்ளார்.
படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என்று விழாவில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இத்திரைப்படம் சுமார் 1200 முதல் 1300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக இத்திரைப்படம் ப்ரீமியம் லார்ஜ் ஸ்கேல் ஐ மேக்ஸ் ( premium largest scale IMAX format 1.43 ) வடிவத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

