திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, தமிழகத்தையே அலறவிட்ட பவாரியா கும்பலை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யார் இந்த பவாரியா கும்பல்? பவாரியா கொள்ளையர்களின் அட்டூழியத்தை தமிழக போலீசார் ஒடுக்கியது எப்படி பார்க்கலாம் விரிவாக…!
‘பவாரியா கொள்ளையர்கள்’.. இந்த பெயரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கிய காலம். அந்த அளவுக்கு மிருகத்தனமான கொடூர கொலைகளையும் கொள்ளைகளையும் அரங்கேற்றி வந்தனர் ‘பவாரியா கொள்ளையர்கள்’.
ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தான் இந்த பவாரியாக்கள். ராஜபுத்திரர்கள் படைப்பிரிவில் மிக முக்கிய வீரர்களாக இருந்தவர்கள் பவாரியாக்கள். 1572ம் ஆண்டு முகலாய மன்னர் பாபரிடம், ராஜபுத்திரர்கள் போரில் தோற்க, அதற்கு காரணம் பவாரியாக்கள் தான் என கருதி, அவர்களை மேவார் ராஜா ‘ராணா சங்கா’ வனப்பகுதிக்கு விரட்டியடிதார்.
வேட்டைச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்த பவாரியாக்களை, 1871ல் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘குற்றப் பரம்பரை’ இனம் என பட்டியலிட்டது. அதன்பிறகு 1972ல் வேட்டைத் தடுப்புச் சட்டம் அமலாக்கப்பட்டதும் பவாரியாக்களின் வாழ்க்கைப் பெரும் கேள்விக்குள்ளானது. இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 2 லட்சத்து 35 ஆயிரம் பவாரியாக்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் ராஜஸ்தானில் இவர்கள் பட்டியல் சமூகமாக அறியப்படுகின்றனர்.
காடுகளைவிட்டு வெளியேறிய பவாரியாக்களுக்கு, நாட்டுக்குள் வந்து என்ன செய்வது என்பதில் ஆரம்பக் காலகட்டங்களில் குழப்பங்கள் எழுந்தது. இந்தநிலையில் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையைத் தங்கள் வரலாறாக கொண்ட பவாரியக்கள், காலச் சூழலில் சிலர் திருடர்களாகவும், கொள்ளையர்களாகவும் திசைமாறினர். பிறப்பிலேயே போர் வீரர்களாகவும், வேட்டையாடிகளாவும் இருந்த பவாரியாக்களுக்கு கொள்ளையும், மனித வேட்டையும் சுலபமாகவே இருந்தது. நாடோடிகள் போல, சுற்றித்திரிந்து நோட்டமிட்டு, சரியான திட்டத்துடன் கொள்ளையை அரங்கேற்றுவது இவர்களது தனிச்சிறப்பாக இருந்தது. திட்டமிட்ட வீட்டின் வாசற்படி முதற்கொண்டு, செல்லப் பிராணிகளின் வளர்ப்பு வரை அத்தனை அசைவுகளை அலசிவிட்டே கொள்ளையில் இறங்கி உள்ளனர் பவாரியா கும்பல்.
பவாரியா குடும்பத்துப் பெண்கள் பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது போலவும், வீட்டுக்கு தேவையான சில சாமான்களை வியாபாரம் செய்வது போலவும் வீட்டை நோட்டமிடுவர். கொள்ளையடிக்கப் போகும் போது மற்றவர்கள் இவர்களைப் பிடித்துவிடக் கூடாது, யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் உடல் மற்றும் முகத்தின் மீது களி மண் அல்லது கரிய நிற எண்ணெயைப் பூசிக் கொண்டுதான் செல்வார்கள். தங்கள் கொள்ளைக்கு இடையூறாக யார் வந்தாலும் ஏன் குழந்தையே என்றாலும் இரும்பு ராடு, கத்தி, நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர்களை மிருகத்தனமாக வேட்டையாடி கொடூரமாக கொன்று விடுவர் பவாரியா கொள்ளையர்கள்.
குலை நடுங்க வைக்கும் அளவுக்கான இந்த கொலை, கொள்ளைகள் தான் ‘பவாரியா கொள்ளையர்கள்’ என்ற பெயரை கேட்டாலே மக்கள் நடுநடுங்கும் அளவுக்கு பயத்தை உண்டாக்கியது. ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களை தாண்டி பவாரியாக்களின் அட்டூழியம் தமிழ்நாட்டில் தலைத்தூக்கியது.
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதிதான் தமிழகத்தில் முதல் வேட்டையை தொடங்கியது இந்த பவாரியா கும்பல். தமிழகத்தில் மட்டும் 24 சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் என்ற தகவல் காவல்துறையும், நீதித்துறையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த 2005ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த சுதர்சனம், பவாரியா கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.
சட்டப்பேரவை உறுப்பினருக்கே நேர்ந்த அந்த கதியை பார்த்து, கொதித்தெழுந்த அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பவாரியாக்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் பவாரியா கொள்ளைக் கும்பலை பிடிக்க வேட்டையை தொடங்கியது தமிழக காவல்துறை. பவாரியாக்களை பிடிக்க அப்போதைய கூடுதல் ஆணையரும், முன்னாள் டிஜிபி-யுமான எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை தேடுதல் வேட்டையை ஆரம்பித்த போது கிடைத்த ஒரே ஒரு தடயம் என்பது சம்பவ இடத்தில் கிடைத்த ஒரு விரல் ரேகை மட்டும் தான். அதுவும் அந்த விரல் ரேகை கருணாகப் பாம்பு வடிவிலான விரல் ரேகை. வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் இதுபோன்று இருக்கும் என்ற கோணத்தில் ஒவ்வொரு சிறைகளிலும் ஆய்வு செய்த போது தான், ஆக்ரா சிறையில் ஒரு குற்றவாளியின் கை ரேகையுடன் ஒத்துபோனது. பின்னர் அந்த குற்றவாளி யார் என்று பார்த்த போது பவாரியா கும்பலைச் சேர்ந்த ஓமர் என்ற ஓம் பிரகாஷ் என்பது தெரியவந்தது.
இப்படி ஒரேயொரு விரல் ரேகையை வைத்து தமிழகத்தையே பயத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த பவாரிய கும்பலை சேர்ந்த 9 பேரை ராஜஸ்தானில் வைத்தே தட்டி தூக்கினர் தமிழக போலீசார். இந்த கும்பலை எத்தனை சிரமத்திற்கு மத்தியில் தமிழக காவல்துறை பிடிக்க முடிந்தது என்பதை கடந்த 2017ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் படத்தில் மிக தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் புழல் சிறையிலேயே மரணமடைந்தனர். ஜாமினில் வெளியே வந்த 3 பெண்கள் தலைமறைவாகினர். எஞ்சிய 3 மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தண்டனை விவரங்களை வரும் 24ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. ஜெயில்தார் சிங் குறித்த தீர்ப்பும் அன்றைய தினம் கூறப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
