தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ. 26) புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேஷியா மற்றும் அதையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும், மேலும் அதே திசையில் நகர்ந்து, நாளை (நவ. 26) தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக 4 இடங்களில் அதிக கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாகவும் அமுதாக கூறியுள்ளார்.
தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (நவ. 25) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் அமுதா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 29ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமுதா தெரிவித்துள்ளார்.
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக். 1 முதல் நவ. 24 வரையிலான காலகட்டத்தில், இயல்பை விட 5 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதாக தெரிவித்துள்ளார்.
