அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்மையில் தனது கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இன்றிரவு நடந்த பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உங்களின் வாக்குகளைப் பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் செங்கோட்டையன். அப்படியிருக்கையில் உங்களிடம் சொல்லாமல் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சிக்கு துரோகம் செய்ததாலேயே நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து கொண்டே தலைமைக்கு எதிராக செயல்பட்டார். அதிமுக தலைமைக்கு கெடு விதித்தார். கட்சிக்கு எதிராக செயல்பட்டு ஏற்கெனவே நீக்கப்பட்ட சிலருடன் இணைந்து அவர் செயல்பட்டார். அவரின் செயல்களை பொறுத்து பொறுத்து பார்த்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. அதனாலேயே அதிமுகவில் இருந்து நீக்கினோம்.
இந்தப் பகுதி மக்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமே, அத்திக்கடவு-அவிநாசி திட்டம். ஆனால் அந்தத் திட்டம் தொடர்பான விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. (இதுதொடர்பான வீடியோவை இபிஎஸ் போட்டுக் காட்டினார்)
வரும் தேர்தலில் கோபித் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். இந்தத் தொகுதியை எடப்பாடி தொகுதிக்கு நிகராக மாற்றுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த திரையில் செங்கோட்டையனுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில வீடியோக்கள் போட்டுக் காட்டப்பட்டன.
