உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உருவாக்கம், திசுக்களைச் சரிசெய்தல், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல், மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைப் பராமரித்தல் என உடலின் அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் புரதம் அவசியம்.
நாம் உண்ணும் உணவில் புரதம் போதுமான அளவு இல்லாதபோது, நம் உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்ட தொடங்குகிறது. இந்த முக்கியமான அறிகுறிகளை நாம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி, பெரிய உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அந்த வகையில், உடலில் புரத பற்றாக்குறை உள்ளது என்பதை உணர்த்தும் ஆறு முக்கிய அறிகுறிகள் இதோ.
உடல் வீக்கம்: புரதக் குறைபாட்டின் மிகவும் கவனிக்கத்தக்க அறிகுறிகளில் ஒன்று உடல் வீக்கம். இது பெரும்பாலும் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் அதிகமாகக் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆல்புமின் என்ற புரதம்தான் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
புரதச்சத்து குறைவாக இருக்கும்போது, ரத்த நாளங்களில் இருந்து திரவம் சுற்றியுள்ள திசுக்களில் கசிய ஆரம்பித்து, நீர்க்கோவை அல்லது வீக்கத்தை (Edema) ஏற்படுத்துகிறது. இது கடுமையான புரதப் பற்றாக்குறையின் அறிகுறியாக இருக்கலாம்.
தசை பலவீனம் மற்றும் சோர்வு: நம் தசைகளில் தான் அதிக புரதம் சேமிக்கப்பட்டுள்ளது. நாம் போதுமான புரதம் உட்கொள்ளாதபோது, உடலின் அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தியைப் பூர்த்தி செய்ய, தசைகளிலிருந்தே புரதத்தை உடல் எடுத்து பயன்படுத்தத் தொடங்குகிறது.
இது காலப்போக்கில் தசை இழப்புக்கு (Muscle Wasting) வழிவகுக்கிறது. இதன் விளைவாக, எப்போதும் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வோம். அன்றாட வேலைகளை செய்வதற்கும், படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் கூடுதல் சிரமம் உண்டாகும்.
முடி, தோல் மற்றும் நகம் பாதிப்புகள்: நம் முடி, தோல் மற்றும் நகங்கள் கெரட்டின், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களால் ஆனவை. புரதப் பற்றாக்குறை ஏற்படும்போது, இந்த அமைப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படும். அதிக முடி உதிர்வு, முடி பலவீனமாகி உடையக்கூடியதாக மாறுதல் போன்றவை நிகழலாம். தோல் வறண்டு, செதில் செதிலாகவோ அல்லது வெளுத்த நிறத்துடனோ காணப்படும். மேலும், நகங்கள் உடையக்கூடியதாகவும், அவற்றின் மேற்பரப்பில் கோடுகள் தோன்றவும் வாய்ப்புள்ளது.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி: புரதம் நம் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் முக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட தேவையான ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்புகளை உருவாக்கப் புரதம் அவசியம். போதுமான புரதம் இல்லாதபோது, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதனால், அடிக்கடி சளி, காய்ச்சல் அல்லது பிற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதோடு, மேலும் காயங்கள் ஆறுவதற்கும் அதிக காலமும் எடுத்துக்கொள்ளும்.
அடிக்கடி பசி எடுப்பது: புரதமானது மற்ற ஊட்டச்சத்துக்களைவிட செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், நம்மை நீண்ட நேரம் பசியின்றி இருக்க செய்கிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. புரதம் குறைவாக இருக்கும்போது, ரத்த சர்க்கரை அளவு விரைவாகக் கூடி, குறையும். இந்த ஏற்ற இறக்கங்கள் உடனடியாகச் சக்தியைத் தரக்கூடிய சர்க்கரை நிறைந்த அல்லது துரித உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும்.
மனநிலையில் மாற்றம்: மூளையின் செயல்பாட்டிற்குத் தேவையான டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகள் அமினோ அமிலங்களால்ஆனவை. அமினோ அமிலங்கள் என்பது புரதத்தின் கட்டுமான அலகுகள். புரதக் குறைபாடு இந்த முக்கியமான மூளை ரசாயனங்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம். இது மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு அல்லது அன்றாட பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதனால் உணவில் புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். முட்டை, இறைச்சி, பால் பொருட்கள், பருப்பு வகைகள், பயறு வகைகள் மற்றும் விதைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சமச்சீராகச் சேர்ப்பது நல்லது.
