சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற செயலியை முன்கூட்டியே (Pre-install) நிறுவுமாறு, தொலைத்தொடர்பு அமைச்சகம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுப்புது ஐடியாக்களுடன் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந் நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பயனாளிகளை காக்கும் வண்ணம், மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
அதாவது, உலக அளவில் மிகப்பெரிய டெலிபோன் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், சுமார் 1.2 பில்லியன் பயனர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு அமைச்சகம் மொபைல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதியதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு மத்திய தொலைதொடர்வு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நவ.28ம் தேதியே மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டு விட்டது. மேலும், புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள அனைத்து சாதனங்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடைபிடிக்க தவறினால் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அரசாங்கம் கூட இதே போல தங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து போன்களிலும் மேக்ஸ் என்ற அரசுக்கு சொந்தமான ஒரு செயலியை ப்ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டும் என கூறியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி இதுவரை சுமார் 6 லட்சம் காணாமல் போன போன்களை கண்டுபிடிக்கவும் உதவி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
