14 வயதில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி சதம் அடித்து அசத்தியது நம் அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் இந்த வருடத்திலேயே அவர் இரண்டு சதங்களை அடித்தது பலருக்கும் தெரியாது. ஆம் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சையது முஸ்தாக் அலி தொடரில் பீகார் அணிக்காக விளையாடி வரும் அவர் இன்று மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருக்கிறார்.

இன்று நடந்த போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 61 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என மொத்தமாக 108 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் 15 வயது தொடுவதற்கு முன்பாகவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் மூன்று சதங்கள் இதுவரை அவர் குவித்திருக்கிறார்.
- ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 101(38)
- ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 144(42)
- சையது முஸ்தாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 108*(61)
இந்த வருடத்தில் மட்டும் மொத்தமாக 15 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் மொத்தமாக குவித்து இருக்கும் ரன்கள் 631. இதில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். இவருடைய பேட்டிங் ஆவரேஜ் 45.07 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 209.63 ஆக உள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அண்டர் 19 ஒருநாள் தொடர் மற்றும் அண்டர் 19 டெஸ்ட் தொடர், டி20 தொடர், SMAT டி20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என அனைத்திலும் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரராக இந்த 14 வயது சிறுவனான சூர்யவன்ஷி ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

மறந்துவிட வேண்டாம் டி20 போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சதங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் சுப்மன் ஆகியோர் நான்கு சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர் தற்பொழுது 3 சதங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இன்னும் இரண்டு சதங்கள் குவித்து முதல் இடத்திற்கு முன்னேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
