இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் மறுஆய்வுக் கூட்டம் இன்று புதன்கிழமை, டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை ரெப்போ விகிதம் மாறுமா, அல்லது அதை நிலையாக வைத்திருக்க குழு முடிவு செய்யுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு ரெப்போ விகிதம் குறித்து முடிவு செய்யும். முடிவுகள் டிசம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்துஸ்தான் நியூஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த முறை வட்டி விகிதக் குறைப்பு சாத்தியமில்லை என்று எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை நம்பிக்கை தெரிவித்தது.
எஸ்பிஐ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமீப காலம் வரை, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தன. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, இந்த எதிர்பார்ப்பு இப்போது சாத்தியமில்லை.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வலுவாக இருந்ததாகவும், தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது. பல உலகப் பொருளாதாரங்கள் தங்கள் ரெப்போ விகிதங்களை நிலையானதாக வைத்திருக்கின்றன, அதாவது அவை ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர்எட்ஜின் அறிக்கையின்படி, நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபரில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.3 சதவீதத்தை எட்டியுள்ளது, இது இலக்கான 4 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும். எனவே, வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். பணவீக்கம் சரிவு மற்றும் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியால் 0.25 சதவீத ரெப்போ குறைப்பு அறிவிக்கப்படலாம் என்று அறிக்கை கூறியுள்ளது.
வட்டி குறைப்புக்கான வாய்ப்பு 50 சதவீதம் இருக்கிறது என்றும் 50 சதவீதம் இல்லை என்றும் இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. இரண்டு முறை தலா 25 அடிப்படை புள்ளிகள் என்றும், ஒரு முறை 50 அடிப்படை புள்ளிகள் என்றும் மொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது.
இதன் காரணமாக நம்முடைய வீடு மற்றும் வாகன கடன்கள் , தங்க நகை கடன்களுக்கான வட்டியும் ஒரு சதவீதம் வரை குறைந்திருக்கின்றன. இது கடன் வாங்கியவர்களுக்கு பல லட்சங்களை சேமித்து தந்திருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது . ஆனால் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த இரண்டு கூட்டத்திலுமே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை .
தற்போது நாட்டில் பணவீக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது, அதேபோல பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில் 8.2% என எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது 5.50 சதவீதமாக இருக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.
