இந்திய சினிமா தற்பொழுது ஒரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. வணிகரீதியில் ஆயிரம் கோடி எடுப்பது இனி சுலபமான விஷயம். ஆம் முன்பை விட இந்திய திரைப்படங்களுக்கு தற்பொழுது நல்ல வரவேற்பு உலகம் முழுக்க கிடைத்து வருகிறது. எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வந்த பாகுபலி 2 திரைப்படம் உலக அளவில் முதன்முறையாக ஆயிரம் கோடியை கடந்து மொத்தமாக 1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
பாகுபலி 2 திரைப்படம் 2017 ஆம் ஆண்டு திரையில் வந்தது. ஆனால் அதற்கு முன்பே 2016 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படம் வெளியானது. அந்த வருடத்தில் அந்த திரைப்படம் 700 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடங்களில் (2017,2018) சைனா, தென்கொரியா, துருக்கி மற்றும் ஜப்பான் நகரங்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் காரணமாக இந்த திரைப்படம் மொத்தமாக 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.
அதன் அடிப்படையில் முதல் முறையாக 2000 கோடி வருவாய் ஈட்டிய திரைப்படம் தங்கல் ஆனது. தற்பொழுது வரை எந்த திரைப்படமும் 2000 கோடிக்கு மேல் வசூல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் RRR, புஷ்பா பாகம் 2, கே ஜி எஃப் பாகம் 2, கல்கி பாகம் 1, ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன.
ஆயிரம் கோடி இரண்டாயிரம் கோடி என இந்திய சினிமா ஒரு பக்கம் வசூல் ரீதியாக முன்னேறி இருந்தாலும் உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களின் எண்ணிக்கையை படித்தால் உங்கள் தலை சுற்றிப் போகும். லட்சக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் விவரம் :
- அவதார் (Avatar – 2009)
இயக்குனர் : ஜேம்ஸ் கேமரூன்

2009-ல் வெளியான அவதார், உலக சினிமாவின் வரலாற்றையே மாற்றிய படம். 3D தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற இந்த படம் பண்டோரா என்ற கற்பனை உலகத்தை திரையில் உயிர்ப்பித்து, பார்க்கும் பார்வையர்கள் அனைவரையும் கட்டி போட்டது. இயற்கை, மனிதன், பேராசை, கலாசாரம் ஆகியவற்றை மையப்படுத்திய இந்த படம் உலகம் முழுதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
உலகளவிலான வசூல்:$2.92 பில்லியன்
இந்திய ரூபாய் மதிப்பில் : 2 லட்சத்து 62 ஆயிரத்து 64 கோடி ரூபாய்.
- அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (Avengers: Endgame – 2019)
இயக்குனர்கள் : ரூசோ பிரதர்ஸ்

மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் உச்சம் என்று சொல்லப்படும் இந்த படம், ரசிகர்கள் 10 ஆண்டுகளாகக் காத்திருந்த கதைக்கான முடிவை இந்தத் திரைப்படம் கொண்டு வந்த காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு எண்ட் கேம் என்ற பெயர் சூட்டப்பட்டது. பல கதாபாத்திரங்கள் இணைந்து தோன்றிய மிகப்பெரிய சூப்பர் ஹீரோ படம் இதுவாகும்.
எம்சியூ வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்த படமாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது.
உலகளவிலான வசூல்: $2.79 பில்லியன்
இந்திய ரூபாயில் : 2 லட்சத்து 54ஆயிரத்து 94 கோடி ரூபாய்.
- அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water – 2022)
இயக்குனர் : ஜேம்ஸ் கேமரூன்

13 ஆண்டுகள் கழித்து வெளியான அவதார் தொடரின் இரண்டாவது பாகம் மீண்டும் உலக ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. கடல் வாழ்க்கை, 3D தொழில்நுட்பம், காட்சித் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை இந்த படத்தை உலகளவில் உள்ள அனைவரையும் மீண்டும் பிரமிக்க செய்தது.
உலகளவிலான வசூல்: $2.32 பில்லியன்
இந்திய ரூபாயில் : 2 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாய்.
- டைட்டானிக் (Titanic – 1997)
இயக்குனர் : ஜேம்ஸ் கேமரூன்

காலத்தால் அழியாத காதல் கதை மற்றும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தான் டைட்டானிக். மிகப்பெரிய கப்பல் விபத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது. காலம் கடந்தும் இன்னும் பார்வையாளர்கள் பெரிதும் நேசிக்கும் படமாக இது உள்ளது.
உலகளவிலான வசூல்: $2.25 பில்லியன்
இந்திய ரூபாயில் : 2 லட்சத்து 2ஆயிரத்து 37 கோடி ரூபாய்.
- ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens – 2015)
இயக்குனர்: ஜே.ஜே. ஆப்ரம்ஸ்
ஸ்டார் வார்ஸ் தொடரின் மிகப்பெரிய வெற்றிப் படம். உலகம் முழுவதும் ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த இந்த படம் வெளியானவுடன் வசூல் சாதனை பலவற்றை அந்த நேரத்தில் முறியடித்தது.
உலகளவிலான வசூல்: $2.07 பில்லியன்
இந்திய ரூபாயில் : 2 லட்சத்து 86 ஆயிரத்து 18 கோடி ரூபாய்.
இந்த பட்டியலை பார்த்த உங்களுக்கே தெரிந்திருக்கும் இந்த பட்டியலில் எத்தனை முறை ஜேம்ஸ் கேமரூன் பெயர் வந்தது என்று. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து வைத்து பார்க்கையில், அவை அனைத்தும் மொத்தமாக வசூல் செய்த தொகையின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா. 7 லட்சத்து 82 ஆயிரத்து 52 கோடி ரூபாய்.

வசூல் மற்றும் இவர் சக்கரவர்த்தி அல்ல இதுவரை மூன்று முறை ஆஸ்கர் விருதும் நான்கு முறை கோல்டன் க்ளோப் விருதுகளை பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆவார். உலக அளவில் 111 முறை நாமினேட் செய்யப்பட்டு, அதில் 61 விருதுகள் இவர் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அவரது இயக்கத்தில் அவதார் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் Avatar : Fire and Ash திரைப்படம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்தத் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.