நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் யங் இண்டியன் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் யங் இண்டியன் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியது தொடர்பான விசாரணைக்கு, வரும் டிசம்பர் 19-ம் தேதி ஆஜராகுமாறு டி.கே.சிவகுமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அப்போது யங் இண்டியன் அறக்கட்டளைக்கு எவ்வளவு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது? அதற்கான ஆதாரம் மற்றும் வருமான வரிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
