பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானதில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பிஆர்ஓ அஸ்வின் குமார் செய்த குளறுபடியால், ஒட்டுமொத்த தமிழக மக்களும் குழப்பத்தில் தவித்தனர்.
ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டபோது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 4 நாள்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அப்போது மற்ற மாவட்டங்களுக்கு பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை என துல்லியமாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து மட்டும் முதலில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், பிறகு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், அதையடுத்து பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி ஒரு மணி நேரத்தில் பல முறை அறிவிப்பு வெளியானது.
இது அப்படியே தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் செய்திகளிலும் மாற்றி மாற்றி அறிவிப்பாக வெளியானது. இதை ஒட்டுமொத்த தமிழகமும் தொலைக்காட்சிகளில் பார்த்தபடி இருந்ததால் யாருக்கு விடுமுறை என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அங்கு பணியாற்றும் பி.ஆர்.ஓ. அஸ்வின் குமார், அந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்பின் அறிவிப்பை சரியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிடாததே குழப்பத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே திருவள்ளூரில் ஏபிஆர்ஓ-வாக இருந்தபோது, மூத்த அமைச்சர் ஆவடி நாசர், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரின் கண்டிப்புக்கு ஆளாகி, சென்னைக்கு மாற்றப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
தற்போது திருவள்ளூருக்கு மீண்டும் பணியிடமாறுதலாகி வந்ததும், ஏற்கெனவே தன்னை பற்றி அமைச்சர் நாசருக்கும், அப்போதைய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸின் கவனத்திற்கும் கொண்டு சென்று, பணியிட மாறுதலுக்கு காரணமான செய்தியாளர்களை புறக்கணிப்பதாகவும், மாவட்ட ஆட்சியரக வாட்ஸ் அப் குழுவில் இருந்தும் நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
பிஆர்ஓ-வாக இருந்து அரசின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மூத்த அதிகாரி, விருப்பு- வெறுப்புடன் தன்னிச்சையாக செயல்பட்டதால், விடுமுறை குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்பின் அறிவிப்பு செய்தி துல்லியமாக மக்களுக்கு செல்லவில்லை. இது பிஆர்ஓ அஸ்வின் குமார் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் இல்லை, மக்களுக்கான அறிவிப்பு ஆகும். இதை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் புகார் அளித்துள்ள செய்தியாளர்கள், அவர் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பிஆர்ஓ அஸ்வின் குமார் மீது மாவட்ட ஆட்சியர் பிரதாப் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று அமைச்சர் நாசரிடம் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்கவும் செய்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
