அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்தார்.
திருப்பூர், அவிநாசி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி 4 தொழிலாளர் சட்டங்களை அறிவித்த உடன் பிரதமர் மோடி இவற்றை வானளவு புகழ்ந்து பேசினார். மோடி ஒரு விஷயத்தை புகழ்ந்தால் அதனை நாம் எதிர்மறையாக புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களை கொத்தடிமையாக மாற்றும் உள்ளடக்கத்தை கொண்டது. ஆங்கிலேயர் காலம் முதல் 150 தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகளை இந்த சட்டங்கள் பறிக்கிறது.
29 சட்டங்களை அழித்து 4 தொகுப்பாக மாற்றி உள்ளனர். இதனால் எந்த நிறுவனத்திலும் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்ற முடியாது. அவர்களின் வருமான உறுதித்தன்மை பாதிக்கப்படும். 300 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் தான் நிலை ஆணை தேவை என மாற்றி உள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள 74 சதவீத நிறுவனங்கள் நிலை ஆணை இன்றி, தொழிலாளர் நிலைத்தன்மை பாதிக்கப்படும்.
தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படவும், அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்த அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருந்தது. இப்போது அதனை பறித்துள்ளனர். 8 மணி நேர வேலை என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அரசு விரும்பினால் 12, 14 மணி நேரம் உயர்த்திக் கொள்ளலாம் என்பது கொத்தடிமை போல உள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 28 ஆயிரம் கோடி உள்ளது. ஆனால் புது சட்டத்தில் நலவாரியமே இல்லை. 90 சதவீதம் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கேட்டபோது, “திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ”தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகள், எங்கெங்கு போட்டியிடுவது என்பது குறித்து பிறகு தான் பேசப்படும்” என்று கூறினார்.
