கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 85,000 விசாக்களில், 8,000 மாணவர் விசாக்கள் ஆகும்.
தாக்குதல் மற்றும் திருட்டு சம்பவங்களைக் காரணம் காட்டி, குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி முதல் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) அறிவித்தது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அமெரிக்க குடிமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளனர் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளமான X இல் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி முதல், 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இதை நிறுத்தப் போவதில்லை; இது தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியில் கடுமையான விசா கட்டுப்பாடு ஒரு முக்கிய பகுதியாகும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் வாதத்தைக் குறிப்பிடும் விதமாக, “அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக்குங்கள்” என்ற தலைப்புடன் டிரம்பின் படமும் அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தது.
மேலும், ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமான விசாக்கள் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தாக்குதல் மற்றும் திருட்டு சம்பவங்கள் காரணமாக பெரும்பாலான விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அமெரிக்க குடிமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விசாக்கள் ரத்து செய்யப்பட்டதற்குப் பின்னால், விசா காலத்தை மீறி தங்குதல், குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்தல் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம், டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.
காசா மீதான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களையும், யூத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களையும் டிரம்ப் நிர்வாகம் குறிவைப்பதாக CNN செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
H1-B விசாக்களுக்கான இந்திய விண்ணப்பதாரர்களுக்கான சந்திப்பு தேதிகளையும் அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் X இல் பதிவிட்டுள்ளதாவது, சந்திப்பு தேதி 2026 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முந்தைய தேதிக்குப் பதிலாக புதிய தேதியில் நேர்காணல்களுக்கு தூதரகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளது.
அமெரிக்கா H1-B மற்றும் H-4 விசாக்களுக்கான புதிய விதியை அமல்படுத்தியுள்ளது, இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் Facebook, Instagram, Twitter, LinkedIn மற்றும் Snapchat உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் சரிபார்க்க வேண்டும். இந்த செயல்முறை டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது, இதன் விளைவாக விண்ணப்பதாரர்களின் சந்திப்பு தேதிகள் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தள்ளிப்போடப்படுகின்றன.
