ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக மாநாடு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில் வருகின்ற 18ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ செங்கோட்டையன், நேரில் இருந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் 18ஆம் தேதி விஜயமங்கலத்தில் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம்.
எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அலுவலர்கள் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு கூறி வரும் ஆலோசனைகளை ஏற்று பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்து வருகிறோம். புதுச்சேரிக்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் வரலாறு படைக்கப் போகிறது என்று கூறினார்.
மேலும், நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் முதலமைச்சர் ஆக விஜயை அரியணையில் ஏற்ற பாடுபடுவது, தவெகவின் தலைமையை ஏற்று கொள்ள இருக்கும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை இங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
