பிரபல குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் கனவை தொடரும் நோக்கத்துடன் ஓய்வு முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
31 வயது வினேஷ் போகத், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். ரவுண்ட்-16 போட்டியில் ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறும் நிலையில், அவரது கனவு நொறுங்கியது.
இதையடுத்து, அரசியலில் களமிறங்கிய அவர், ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், தான் அறிவித்திருந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிரம் பதிவில், . “நான் இன்னும் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். என் மீதான தீ அணையவில்லை” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியை இலக்காக வைத்து பயமின்றி முன்னேற போவதாகவும், இந்த முறை தனது மகனும் சியர் லீடராக உடன் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
