நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சூடான விவாதங்கள், வெளிநடப்புக்கள் மற்றும் போராட்டங்களால் நிறைந்திருந்தது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடரின் போது தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி இல்லாத நேரத்தில் பிரியங்கா காந்தி எதிர்க்கட்சியை வழிநடத்தினார்.
அப்போது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அருகில் பிரியங்கா காந்தி அமர்ந்திருந்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த தேநீர் விருந்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே பல மகிழ்ச்சியான தருணங்கள் காணப்பட்டன. ஒவ்வாமைகளைத் தவிர்க்க தனது வயநாட்டுப் பகுதியிலிருந்து ஒரு மூலிகையை உட்கொள்வதாக பிரியங்கா எம்.பி.க்களிடம் கூறினார். இதைப் பார்த்து பிரதமர் மோடியும் ராஜ்நாத் சிங்கும் சிரித்துக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடியின் சமீபத்திய எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்தும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். பயணம் நன்றாக இருந்தது என்று பிரதமர் மோடி பதிலளித்தார்.
இதைதொடர்ந்து பிரதமர் மோடிக்கு எம்.பி. மாணிக்கம் தாகூர் தமிழில் வணக்கம் கூறினார். அப்போது பிரியங்கா காந்தி, எனக்கும் தமிழில் சில வார்த்தைகள் தெரியும் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். உடனே, காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்க என்று பிரியங்கா காந்தி கூறினார். இதற்கு சிரிப்பலை எழுந்தது.
