மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனை பாஜக அரசு நசுக்கி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005-ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி.பி ஜி ராம் ஜி (விக்சித் பாரத் – ரோஜ்கர் அவுர் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டம் குறித்து கருத்த தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பல ஆண்டுகளாகவும், கொரோனா காலத்திலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த திட்டத்தின் கட்டமைப்பை விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் தன்னிசையாக பாஜக அரசு மாற்றி அமைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஒருவருக்கு எங்கே, எப்படி, எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை டெல்லியில் இருந்து எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனை பாஜக அரசு நசுக்குவதாக உள்ளது என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
