அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை நாங்கள் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு D என்றும், தமிழக வெற்றி கழகத்திற்கு V என்றும் குறிப்பிடப்பட்டு, அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஒரு சிலர் திமுகவுடன் கூட்டணி செல்லலாம் என்றும், பலர் தவெக என்றும், தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி உயிர் உள்ளவரை காப்பாற்றி வந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா கட்சியை நடத்தி வந்தார். அண்ணா திமுக என்ற பூ மாலை குரங்கு கையில் மாட்டியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி இருக்கும் வரை நாங்கள் இணையமாட்டோம். எடப்பாடி பழனிசாமி ஒரு தற்குறி. ஓபிஎஸ் என்ன முடிவு எடுத்தாலும் அதன் வழியில் செல்ல தயார்” என்றார்.
அதன் பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இன்று கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 7 இடங்களில் டெபாசிட் தொகையை அதிமுக இழந்திருக்கிறது. ஏழு நாடாளுமன்ற தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பழனிசாமி என்ற பெயரை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது.
ஒற்றை தலைமை வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சி வழி நடத்திக் கொண்டிருக்கிறார், அவர் வந்தால் அனைத்து தேர்தலிலும் நம் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால் பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு 11 தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வி தான் கிடைத்தது. இந்த மாபெரும் இயக்கத்தை படு பாதாளத்தில் தள்ளிவிட்டு, அதிமுக அனைத்து தொண்டர்களும் வெம்பி, வெதும்பி என்ன செய்யப் போகிறோம் என்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வரும் காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
உங்களது கருத்துக்களை, உணர்வுகளை நீங்கள் அனைவரும் தெரிவித்து இருக்கிறீர்கள். பல கூட்டங்களில் நம் பிரச்சனைகளை பேசி முடித்து விட்டோம். வைத்திலிங்கம் மற்றும் ராமச்சந்திரன் சொல்லிய கருத்துக்களை ஏக மனதாக முன்மொழிகிறேன். ஒருபோதும் அதிமுகவில் இனையமாட்டோம், தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறினார்.
