கேரள மாநிலத்தில் பெரும் விபத்தில் சிக்காமல் வந்தே பாரத் ரயில் தப்பியுள்ள பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் (20633) இரவில் சென்று கொண்டிருந்தது. அகத்துமுரி ஹால்ட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் ஒரு ஆட்டோ அநாதையாக நிற்பதை ரயில் ஓட்டுநர் கவனித்து விட்டார்.
அப்போது மணி இரவு 10.10. உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கை ஓட்டுநர் இயக்கினார். அதிர்ஷ்டவசமாக ஆட்டோ மீது ரயில் மோதாமல் நின்றது.
பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், அதிகாரிகள் ஆகியோர் சென்று ஆட்டோவை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் சுதி என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இல்லையெனில் வந்தே பாரத் ரயில் சிக்கி பலர் காயமடைந்திருக்கவோ, அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளது.
