புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா பொய் சொல்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது. அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். புடினின் வீடு மீதான தாக்குதல் ஒரு புனைகதை. அவர்கள் பொய் சொல்கின்றனர்.
எங்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா மறுப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்கள். மேலும், ரஷ்யர்கள் கடந்த காலங்களில் எங்களது அமைச்சரவை கட்டடத்தை ஏற்கனவே குறிவைத்துள்ளனர்.
உக்ரைன், ராஜதந்திரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக, ரஷ்யா எப்போதும் அத்தகைய நடவடிக்கைகளையே எடுக்கிறது. இது எங்களுக்கிடையேயான பல வேறுபாடுகளில் ஒன்றாகும். இந்த நேரத்தில் உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். நிலையான அமைதியை உருவாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை ரஷ்யா சீர்குலைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இது நல்லதல்ல!
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது வீட்டை உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த குறிவைத்தது என்று ரஷ்ய அதிபர் புடின் என்னிடம் கூறினார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
