பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வியாழன், வெள்ளியுடன் சேர்த்து சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் விடுமுறை கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த முறை விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல வழக்கமாக ரூ.1,800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.4,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கும் அதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மதுரைக்கு செல்ல ரூ.1,200 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.3,500 வரையும், கோவைக்கு ரூ,1,200 வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ 3000 வசூலிக்கின்றனர். பெங்களூரு போன்ற நகரங்களுக் கும் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இரட்டிப்பு கட்டண வசூல் புதிதல்ல. ஒவ்வொரு முறை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வரும்போதெல்லாம் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி விற்பனை செய்கின்றன. இதில் போக்குவரத்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
