தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
அதன்படி, தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (ஜன.15) அன்று மதுரை மாநகரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகள் எல்.இ.டி. திரையில் வெளியிடப்பட உள்ளது. இதில் காளைகளைப் பிடித்த வீரர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.
இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் கூடுவதை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் காளைகளை கொண்டுவருபவர்கள் ஒத்துழைப்பு வழங்கி விழாவை சிறப்பாக நடத்திட மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
