ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. அதேபோல், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்த வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை அளித்தார்.
4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்தியலிங்கம், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒ.பி.எஸ் கூடாரம் காலியாகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்துவிட்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் அதிருப்தியடைந்து விஜய் கட்சியில் சேர்ந்த செங்கோட்டையனும், தவெகவிற்கு இழுக்க பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு மசியாத வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜியின் காய்நகர்த்தலின்படி, திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது,
அதாவது, இவருடைய இந்த முடிவுக்கு திரைமறைவில் நடந்த டீலிங் தான் காரணம் என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியின் சீட்டை வைத்தியலிங்கம் அல்லது அவரது மகன் பிரபுவுக்கு வழங்குவதாக ஸ்டாலின் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர் திமுகவுக்கு தாவியுள்ளார் என்கின்றனர் தகவல் அறிந்த வட்டாரங்கள்.
