பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தானும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் நிதி திரட்டுவதற்காக மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நேற்றி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீப், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனது அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்துப் பேசினார். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு மேம்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட ஷெரீப், கையிருப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், ஆனால் இதில் நட்பு நாடுகள் மற்றும் பிற நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களும் அடங்கும் என்றும் கூறினார்.
கடன் வாங்கச் செல்பவர்கள் தலைகுனிந்துதான் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று கூறிய அவர், அந்தக் கடனைப் பெறுவதற்காகத் தானும் ஆசிம் முனீரும் அனுபவிக்க நேர்ந்த அவமானகரமான சமரசங்கள் குறித்து ஷரீஃப் மேலும் விளக்கமாக பேசினார்.
அதாவது, “ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் நானும் உலகெங்கிலும் பணம் கேட்டுச் செல்லும்போது, நாங்கள் அவமானமாக உணர்கிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு ஒரு பெரும் சுமையாக இருக்கிறது. நாங்கள் வெட்கத்தால் தலைகுனிகிறோம். அவர்கள் எங்களை என்ன செய்யச் சொன்னாலும், எங்களால் மறுக்க முடிவதில்லை,” என்றார். கடுமையான கொள்கைகளை அமல்படுத்திய பிறகு, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தைப் பற்றி விவாதித்து வரும் நேரத்தில் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மூலதனத்தை எளிதாகக் கிடைக்கச் செய்ய மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்திற்கு தனது அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் தொழில்துறை தலைவர்களின் கருத்துகளை கவனமாகக் கேட்டு, தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து அதன் கடன் வழங்கும் திட்டம் மற்றும் காலநிலை தொடர்பான ஒரு தனி நிதி ஆகியவற்றின் கீழ் 1.2 பில்லியன் டாலரைப் பெற்றுள்ளது. இந்த நிதி, பாகிஸ்தான் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவும், அதன் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் உதவியுள்ளது.
பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், இந்த வாரம் தனது முக்கிய வட்டி விகிதத்தை 10.5 சதவீதமாக எதிர்பாராத விதமாக மாற்றாமல் வைத்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த அச்சங்களைக் காரணம் காட்டி, அந்த வங்கி ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 3.75 சதவீதம் முதல் 4.75 சதவீதம் வரை இருக்கும் என்று கணித்துள்ளது.
