1980கள் மற்றும் 1990களில் தூர்தர்ஷன் செய்திகளின் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக இருந்த மூத்த தூர்தர்ஷன் தொகுப்பாளினி சரளா மகேஸ்வரி இன்று காலமானார். அவருக்கு வயது 71.
இதுதொடர்பாக DD நேஷனல் தனது எக்ஸ் தளத்தில், மகேஸ்வரியின் “எளிமை, கட்டுப்பாடு மற்றும் தனித்துவமான பண்புகள்” பார்வையாளர்களின் இதயங்களில் ஆழமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. அவரது குரல்வளம், தெளிவான உச்சரிப்பு மற்றும் செய்தி வழங்கும் முறைக்காக மக்களிடையே மிகவும் பரிச்சயமானவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, மகேஸ்வரி டிடி-க்காக ஆடிஷன் செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில், அவர் ஒரு அறிவிப்பாளராக இருந்தார், ஆனால் செய்தி வாசிப்புக்கு மாறி 2005 வரை ஒரு தொகுப்பாளராகப் பணியாற்றினார். கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை தூர்தர்ஷனில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவ்வளவு பிரபலமான சரளா மகேஸ்வரி இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள நிகம் போத் காட்டில் நடைபெறவுள்ளது.
