தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். “அப்போது பேசிய அவர்,
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவா் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுபோன்ற எந்தவித நிபந்தனையும் விதித்தது இல்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணி கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது; ஏற்கப்படாது.
மதிமுக சோா்ந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடந்து சென்று பல லட்சம் மக்களை சந்தித்து வருகிறேன். திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக திகழும். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என்றாா்.
