சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக – திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதாவது, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது யார்? மக்கள் விரோத திமுக அரசை எதிர்ப்பதே முதன்மை. மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.
இதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என்றும் விஜய் சவால் விடுத்திருந்தார். இந்தநிலையில் இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு என்னத் தெரியும்? ஒருப் பிரச்னை நடந்தது. 72 நாள்கள் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. ஒருத் தலைவன் என்றால் பதில் சொல்லியாக வேண்டும்.
ஒருக் கட்சித் தொடங்கிவிட்டால், நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும், மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்தக் கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையைச் செய்தாரா விஜய்? 15 நாள்கள் அலுவலகத்தையே மூடிவிட்டுச் சென்றுவிட்டார். அப்புறம் எங்குப்போய் கட்சி நடத்தி, மக்களுக்கு நன்மைச் செய்யப்போகிறார். ஒருப் பிரச்னையை சந்திக்கக்கூடத் திறன் இல்லாதவர் விஜய். நாங்கள் யாரையும் குறைச்சொல்லவில்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். மக்களைச் சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானவர்கள். மக்கள் கொடுக்கின்ற தீர்ப்பே இறுதியானது என்றார்.
