சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள தாளமுத்து நடராசன் திடலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். திடலுக்குள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், கூட்டநெரிசல் மற்றும் கடும் வெயிலில் நின்றிருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
இவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த உடலை பெறமாட்டோம் என அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர். அதாவது குடும்பத்தை காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இருப்பினும், சூரஜ் மரணத்தை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டு தவெக பொதுக்கூட்டங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், நேற்றைய தவெக கூட்டத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் எப்படி நுழைந்தார் என்று கேள்வி எழுந்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல், சூரஜ்ஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட விஜய் தரப்பிலோ, தவெகவினர் தரப்பிலோ யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், கரூர் சம்பவத்துக்கும் அமைதி காத்த விஜய், சூரஜ் மரணத்திலும் மவுனம் காப்பது அரசியல் ரீதியாக மீண்டும் பேசுப்பொருளாகியுள்ளது.
