சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும், 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் எழும்பூரில் வழக்கமாக நின்று செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடையில் இனி ரயில்கள் இயக்கப்படாது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6 நடைமேடைகளில் இனி புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ரத்து காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
