ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானில் இருக்கும் இந்தியக் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வரும் நாட்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், வணிக ரீதியிலான விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது ஈரானில் தங்கியிருக்கும் மாணவர்கள், ஆன்மீகப் பயணிகள் (Pilgrims), வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும், ஏற்கனவே ஜனவரி 14 அன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக இந்தியத் தூதரகம் அவசர கால உதவி எண்களை (+989128109115, +989128109109) வெளியிட்டுள்ளது. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
