2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்குக் கூட்டணி மாற்றங்கள் குறித்த யூகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.
தற்போதைய ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் கோருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தரப்போ கடந்த தேர்தலைப் போலவே 25 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழுபறியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விஜய் தனது கட்சி சார்பில் காங்கிரஸிற்கு அதிக இடங்களை ஒதுக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
வேலூர் மாநாட்டில் பேசிய விஜய், திமுக கூட்டணியைச் கல்லாப் பெட்டி கூட்டணி என்று கடுமையாகச் சாடினார். அதே சமயம், காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களுடன் விஜய் தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராகுல் காந்தியுடன் விஜய்க்கு இருக்கும் சுமுகமான உறவு, இந்தக் கூட்டணியைச் சாத்தியமாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் போதிய இடங்கள் கிடைக்காவிட்டால், விஜய்யுடன் கைகோர்ப்பது ஒரு மாற்றாக இருக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அரசியலில் அனைவருடனும் பேசவேண்டும் என்றார். மேலும் காங்கிரஸின் அடிமட்ட பலத்தை அறிந்தே தங்களுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்புவதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் ஒருவேளை திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யுடன் இணைந்தால், அது திமுக-விற்குப் பெரும் பின்னடைவாக அமையும்.
