இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவரான தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சற்றுமுன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 101.
சமூக நீதிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வந்த தோழர் நல்லக்கண்ணு, வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 25 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
இதுதொடர்பாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நல்லக்கண்ணு, இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதி தீவிர சிகிச்சையில் இருந்தபோதும், முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால், நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது மறைவு செய்தியை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
