தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ‘அதிகாரப் பகிர்வு’ (Power Sharing) அளிக்கப்பட வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் வெறும் தேர்தல் நேரத்தில் மட்டும் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் கட்சி அல்ல என்றும், ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நிலவும் கூட்டணி ஆட்சி முறையைத் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பது அவரது முக்கிய வாதமாக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே நிலவும் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய அவர், கடந்த 58 ஆண்டுகளாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருப்பது கட்சியின் வளர்ச்சியைப் பாதிப்பதாகக் கூறி வருகிறார்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) மதியம் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டணி எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சந்திப்பாக கருதப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது திமுக 27 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை இடங்களை வழங்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சந்திப்பு முடிந்தபின் பி. சிதம்பரம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.
https://x.com/manickamtagore/status/2029019345096196275
இந்த நிலையில் கூட்டணி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், ‘கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்புதான். ஆனால் எந்தவொரு தனிநபரையும் விட கட்சியே மிக உயர்ந்தது. நமது விருப்பத்துக்கு ஏற்ப தலைமை எடுக்கும் முடிவுகள் இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக் கொள்வதே உண்மையான கடமை. ஏனென்றால் ஒன்றுமையே மிகப்பெரிய சக்தி’ என்று பதிவிட்டு உள்ளார்.
