மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-ஐ (Essential Commodities Act) மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில், தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ், சமையல் எரிவாயு (LPG) ஒரு அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது முழு உற்பத்தித் திறனையும் சமையல் எரிவாயு தயாரிப்பிற்கே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோகெமிக்கல் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற எரிவாயுக்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அவை அனைத்தும் வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்திக்கே திருப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதையும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதையும் அரசு தடுத்து நிறுத்துகிறது.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை மீறுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களான உணவு பொருள்களின் பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எரிவாயுவைப் பதுக்குபவர்கள் அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், விதிகளை மீறும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான குறிக்கோள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
