தென்னிந்தியத் திரையுலகின் ‘கனவுக்கன்னி’யாக இரு தசாப்தங்களுக்கும் மேலாக வலம் வரும் நடிகை த்ரிஷா, தற்போது சினிமாவை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்து மைல்கல் சாதனை படைத்துள்ள த்ரிஷா, கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவெளியை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது த்ரிஷாவின் கைவசம் ‘கருப்பு’ உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ரிலீஸுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன. இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் புதிய கதைகளைக் கேட்க ஆர்வம் காட்டவில்லை என்றும், படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை தனது உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே இத்தகைய முடிவை எடுப்பது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
த்ரிஷாவின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். சமீபகாலமாக அவர் தமிழக அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் இணையவோ அல்லது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படவோ வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து த்ரிஷா தரப்பிலிருந்தோ அல்லது அவரது குடும்பத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
