பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது, மழைக்காக ஒதுங்கி தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டிடத்தின் சுவரும் கூரையும் இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மழையினால் பலர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சூறாவளிக் காற்றினால் மரங்கள் மற்றும் ராட்சத விளம்பரப் பலகைகள் வேரோடு சாய்ந்துள்ளது. மழையினால் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்ததால், கராச்சி மாநகரின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது.
இது குறித்து கராச்சி மேயர் முர்தாசா வஹாப் விடுத்துள்ள அவசர குறிப்பில், “பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதால் தீவிர மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
