மேற்கு ஆசியாவில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, அமெரிக்காவிலிருந்து எல்பிஜி (LPG) இறக்குமதி செய்யும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து 16,714 டன் எல்பிஜி ஏற்றி வந்த ‘பைக்ஸிஸ் பயனியர்’ (Pyxis Pioneer) என்ற சரக்குக் கப்பல், இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. பிப்ரவரி 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய இந்த கப்பல், சுமார் ஐந்து வாரப் பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாக இந்தியக் கரைக்கு வந்துள்ளது. ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் (Aegis Logistics) நிறுவனத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த எரிவாயு, கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், போர் நடைபெறும் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் 22 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களும், அதில் 611 இந்திய மாலுமிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தியக் கடற்படை மற்றும் தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களில் ‘நந்தா தேவி’ மற்றும் ‘சிவாலிக்’ ஆகிய எல்பிஜி கப்பல்கள் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
