திமுக அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் தேர்தல் பிரசாரங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அறிவாலய காம்பவுன்ட்டை தாண்டி வந்த அந்த தகவலின் படி, கடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக திமுக எம்.பி. ராஜா பேசியதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜாவை, “பிரச்சாரத்துக்கே செல்ல வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் கூறும் அளவுக்கு சர்ச்சையானது.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியது தேசிய அளவிலான சர்ச்சையாக வெடித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. மறுபுறம் அமைச்சராக இருந்த பொன்முடி மகளிர் விடியல் பேருந்து திட்டத்தில் பெண்களிடம் ‘ஓசி பஸ்’ என்றும், மற்றொரு நிகழ்வில் இந்து மதத்தின் சைவ, வைணவ சமயங்கள் பற்றி ஆபாசமாக பேசியும் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் உண்டு பண்ணினார். இதனால் அமைச்சர் பதவியை பறிகொடுக்கும் நிலை பொன்முடிக்கு ஏற்பட்டது.
இதேபோல் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசி முதல்வர் மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கைக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் பொதுவெளியில் பேசும் கருத்துகள் சர்ச்சையாகி விடுவதால், தற்போதைய தேர்தல் நேரத்தில் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏதும் ஏற்பட்டு வெற்றியை பாதித்துவிடக்கூடாது என கணக்குப்போடும் முதல்வர் ஸ்டாலின், பொன்முடி, ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் சர்ச்சையான வகையில் கருத்து தெரிவிக்க கூடாது என ‘வாய்ப்பூட்டு’ போட்டுள்ளாராம்.
ஏற்கனவே ஆளும் அரசு மீது நிர்வாக பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்ற பல காரணங்களால் மக்களிடையே ஒரு அதிருப்தி நிலவும் எனும்போது, மேற்கொண்டு தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களின் போது தனி நபர் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சை கருத்துக்கள் வெளிப்படாதவாறு தவிர்க்குமாறு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். “அனைவரும் திமுக அரசின் திட்டங்கள் பற்றி மட்டுமே மக்களிடம் பேசி ஆதரவு திரட்ட வேண்டும்” என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் கூறுகின்றன. பார்க்கலாம் – ‘பாடிய வாய்கள் சும்மா இருக்குமா?’ என்று…
