கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, இன்றும் (மார்ச் 24) யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்ததன் எதிரொலியாக, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,04, 000 விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.340 குறைந்து, ரூ13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை புதிய உச்சங்களை நோக்கிச் சென்ற தங்கம், இன்றும் இவ்வளவு பெரிய சரிவைச் சந்திந்துள்ளது.
நேற்றும் காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து இன்ப அதிர்ச்சியளித்தது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் நிலைமை தலைகீழாக மாறி, மேலும் ரூ.2,240 சரிந்தது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.7,600 வரை குறைந்து, சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை குறைவானது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், இந்த விலை வீழ்ச்சி பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது இன்னும் குறையுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தங்கம் வாங்குபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்கூட்டியே முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
