தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ( அமமுக ) 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில், அமமுக போட்டியிட வாய்ப்புள்ள 11 தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய தொகுதியான சைதாப்பேட்டையில் அமமுக களம் காண உள்ளதாகத் தெரிகிறது. மேலும் சோளிங்கர், மதுரை மத்தி, மன்னார்குடி, பூந்தமல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர், காரைக்குடி, பெரியகுளம் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. கட்சிப் பணிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களிலும் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுத் தனி முத்திரை பதித்த அவர், இந்த முறை தனது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அமமுக தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
