தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கரூரில் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்பி இன்பதுரை ஆகியோர், கரூரில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எம்.ஆர்,விஜயபாஸ்கர், முதலில் 12 செட் போட்டார்கள், அதன்பிறகு 40 செட் போட்டார்கள், தற்போது 120 செட் போட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைத்து தரப்பினருக்கும் புகார் கொடுத்துள்ளோம். பேனர் வைத்து மீட்டிங் நடத்தினர். நாங்கள் புகார் கொடுத்த பிறகு பேனரை நீக்கி உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.இடைத்தேர்தலில் எவ்வாறு செந்தில் பாலாஜி செயல்பட்டாரோ அதுபோன்று இப்போது செயல்படுகிறார். மக்களுக்கு பணம் கொடுத்து, சாப்பாடு போட்டு, சரக்கு கொடுத்து ஓட்டு வாங்குவதை விட இவர்தான் வெற்றி பெற்றவர் என அறிவித்துவிட்டு போகலாம். எதற்காக இவ்வளவு செலவு செய்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும். மக்களை ஆடு மாடுகள் போல் அடைத்து வைத்து வாக்கு சேகரிக்கின்றனர். கரூரில் திமுக ஆதரவு அதிகாரிகள் இன்னும் உள்ளனர். கரூரில் உள்ள அதிகாரிகளை மாற்ற வேண்டும்.இல்லை என்றால் தேர்தல் நேர்மையாக நடைபெறாது.
இதே நிலை நீடித்தால் கரூரில் ஒரு தலைப்பட்சமான தேர்தல்தான் நடக்கும். அளவுக்கு அதிகமான பணம் வழங்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, முன்னோக்கி செல்லும் மனித சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் வகையில் கரூரில் மனித பட்டியை திமுக செயல் படுத்துகிறது.
கரூரில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன் 40 பட்டிகள் அமைத்து வைத்திருந்தனர்.தற்போது 120க்கும் அதிகமான மனிதப்பட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதி ஏற்பாடு செய்து மக்களை அங்கு அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு செட் அமைத்து செயல்படுத்துகின்றனர். திருதிராஷ்டர்கள் போல கண்கள் இருந்தும் பார்க்காமல் மடந்தைகள் பல தேர்தல் அதிகாரிகள் உள்ளனர்.ஐம்பதாயிரம் நாற்காலிகள் ஏற்பாடு செய்து பட்டிகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். அனுமதி இல்லாமல் செட் அமைத்து பொதுமக்களை அழைத்து வருகையை பதிவு செய்கின்றனர்.
தினமும் காலையிலிருந்து மாலை வரை அவர்கள் அங்கு தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.120 செட்டுகளையும் போட்டோ எடுத்து கொடுத்துள்ளோம். திடீர் சோதனை மேற்கொண்டபோது அது திடீர் ஹோட்டலாக மாறிவிட்டது. ஒரு ஹோட்டல் வைக்க வேண்டுமென்றால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் ஆனால் அதுவும் பெறவில்லை. சட்டங்கள் வெறும் பேப்பரில் மட்டுமே உள்ளது. இது எங்களின் பட்டி தான் என செந்தில் பாலாஜி பேசும் பேட்டி கூட உள்ளது என்று ஆதாரத்துடன் பேசியுள்ளார்.
